யாருங்க அங்க?! ஆரம்பிக்கும் போதே "யோவ்! என்னைய்யா தலைப்பு இது! கெரகசாரம்"னு கொரலு விடறது? இதென்ன அவ்வளவு ஈசியான சமாச்சாரம்னு நினைச்சிட்டீங்களா? இங்க மட்டும் ஏனோதானோன்னு இருந்து கோட்டை விட்டுட்டீங்கன்னா அப்பறம் வாழ்க்கை முழுக்க தமிழ்மணமும் தேன்கூடும்தான் கதி! ஏஞ்சொல்லறேன்னா புள்ளைங்க படிச்சு முன்னேற்ற வேகத்துக்கும், அவங்க வெவரமாகற லெவலுக்கும், இருக்கற மெதப்புக்கும் போற போக்கைப் பார்த்தா இந்த வடிவேலு சரளாக்காவை புடிச்சமாதிரி, மனசுக்குப் புடிச்ச பொண்ணு வீட்டு முக்குல மறைவா நின்னுக்கிட்டு வெளில வாரப்ப ஒரு கரூர் கமுக்காளத்தை போர்த்தி அப்பிடியே தூக்கிக்கிட்டு வந்து தாலி கட்டுனாத்தான் உண்டுபோல! அதுக்கப்பறம் வாங்கப்போற விழுப்புண்களை வைகைப்புயலே தாங்கும்போது நமக்கென்னங்க?!
சரிங்க! வீட்டுல சொல்லீட்டிங்க! அவங்களும் நாலாபக்கமும் தகவலை பரப்ப ஆரம்பிச்சிருப்பாங்க! நீங்க என்ன செய்யப்போறீங்க?! வேண்டிய மாற்றங்கள் எல்லாம் செஞ்சு பார்க்க பளிச்சுன்னு மாறுனீங்களே! அதற்கு ஆதாரம் வேண்டாமா? அதனால இப்போ செய்ய வேண்டியது மேலும் பளிச்சுன்னு இருக்கறமாதிரி ரெண்டு போட்டோ எடுக்கறது! நீங்க ஆரம்பக்காலத்துல இருந்து ஆர்னால்டு சிவனேசனுக்கும், சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் ரசிகரா இருக்கலாம்! அதுக்காக கட்பனியன் போட்டுக்கிட்டு இல்லாத ஆர்ம்ஸ்சை பிதுக்கிக்காட்டற மாதிரியோ, கால்மேல கால் போட்டுக்கிட்டு "நான் மலேடா!!!"ங்கற மாதிரி விட்டத்தை பார்த்துக்கிட்டோ இருக்க போட்டோவெல்லாம் வேளைக்காவாது! ரொம்ப ஃபார்மலாவும் இல்லாம ரொம்ப இயல்பாகவும் இல்லாம ஒரு மார்க்கமா "ஆமாங்க! நீங்க மாப்ளைய பார்க்கறதுக்கவே எடுத்த போட்டோ இது"ங்கற மாதிரி இருந்தா எதேஷ்டம்! தொப்பை தெரியக் கூடாதுங்கறதுக்காக உள்ள இழுத்துப் பிடிச்சுக்கிட்டும், மேல டாப்புல காலி ஏரியா வரக்கூடாதுங்கறதுக்காக மூஞ்சியை மேல தூக்கிட்டும் ஒரு மாதிரி அவஸ்தையோட இருக்கற மாதிரி நாமளே போட்டோ எடுத்துக்கறதை விட இதுக்குன்னே இருக்கற ஸ்டூடியோல போய் எடுத்துக்கிட்டா அவங்க இதெல்லாம் தெரியாத மாதிரி அழகான ஆங்கிள்ல நல்லா சிரிச்சா மாதிரி ஒரு ஃபுல் சைசும் ஒரு ஆஃப் சைசும் எடுத்துக் குடுப்பாங்க! சர்குலேசனுக்கு இதை விடுங்க! (நானெல்லாம் கோவை IABலதான் தான் எடுத்தேன்! இன்னைக்கும் எங்க வீட்டுல அப்பப்ப "இந்த IAB மட்டும் இல்லைன்னா நமக்கு கல்யாணமே நடந்திருக்காது"ங்கற அசரீரி கேட்கும்!
)
இன்னொன்னும் ஞாபகம் வைச்சுக்கங்க! என்னதான் பொண்ணு பிக்ஸ் ஆகி அவங்களை அடிக்கடி பார்த்து பேசுனாலும் கல்யாணம் முடியற வரைக்கும் அவங்களுக்கு இந்த போட்டோல இருக்கற முகம் தான் ஞாபகம் இருக்கும்! ஏன்னா, அவங்க தெனம் நைட்டு தூங்கப்போறது இந்த போட்டோவை பார்த்துட்டுத்தான்! (உங்க முகராசிக்கு ஏற்றபடி, ஒரு செல்ல 'இச்'சோ இல்லைன்னா பொய்க்கோப கண்ணக்கிள்ளலோ கிடைக்கலாம்! ) அதனால பொகைப்படத்தை பார்த்து பக்குவமா எடுங்கப்பு!
வாழ்க்கைல கடைசி வரைக்கும் விடை தெரியாத ஒரு கேள்வி இருக்கும்னா அது "நமக்கு எந்த மாதிரி பொண்ணு சரியா வரும்?!"கற கேள்வியாத்தான் இருக்கும்! ஏன்னா நாம எந்த மாதிரி ஆளுங்கறதே நமக்கு முழுசா தெரியாது! இன்னைக்கு டிவில "விரும்புகிறேன்" போட்டா "அடடா! பொண்ணுன்னா இப்படி சினேகா மாதிரி பாவாடை தாவணில அம்சமா இருக்கனும்"னு தோணும்! அடுத்தநாளே SCVல கஜினி பாட்டுல "சுட்டும் விழி சுடரே"ல அசின் நெளிஞ்சு நடக்கறதை பார்த்தா "கட்டுனா இந்தமாதிரி அசத்தலான புள்ளையத்தான் கட்டனும்"னு தோணும்! என்னங்க செய்யறது? நம்ப புத்தி அப்படி! அதனால ஆண்டவன் அவங்களை மட்டும் அத்தன தினுசா படைச்சு வைச்சிருக்காப்புலன்னு மனசை ஒழப்பிக்காதிங்க! ஆண்டவன் நமக்கெல்லாம் அவங்களை அத்தனை தினுசா பார்க்கற கலைக்கண்ணை கொடுத்திருக்கான்னு மனசை தேத்திக்கங்க!
இந்த குழப்பத்தை எப்படிங்க தாண்டறதுன்னு கேக்கறீங்களா? அரசியல் கட்சிகளால பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லைன்னு இதுநாள் வரைக்கும் பொலம்புன ஆளா இருந்தீங்கன்னா அந்த நெனைப்பை மாத்தவேண்டிய நேரம் வந்துருச்சு! அவங்ககிட்ட இருந்து நாம இப்போ கடன் வாங்கப்போற அறிவுதான் "குறைந்த பட்ச செயல் திட்டம்"! அதாவது நாம ஆசைப்படற அத்தனை அம்சங்களும் இருக்கற பொண்ணா வேணும்னு நினைக்காம, அவசியம்னு நினைக்கற எதிர்பார்ப்புகளின்படி பொண்ணு தேடறது! ஆசைங்க எதிர்பார்ப்புங்க ஆயிரம் இருக்கலாம்! ஆனா நம் இயல்புக்கும் நம் எதிர்காலத் திட்டத்துக்கும் நம் வீட்டாருக்கும் ஏற்றபடி வரப்போகிற பெண்ணுக்கு குறைந்தது இந்த அம்சங்கள் இருந்தா போதுங்கற முடிவு! நம்ப கலருக்கு மேட்சா மாநிறமா இருந்தா போதும், பொண்ணு வேலைக்கு போகவேண்டாம்னு நினைக்கறதால டிகிரி படிச்சிருந்தா போதும்! இப்படி நல்லா ரெண்டு நாளைக்கு யோசிச்சி ஆறேழு கண்டுபிடிச்சுட்டீங்கன்னா கொழப்பமில்லாம பொண்ணு தேடலாம்! "என்னப்பு ஓவர டகால்ட்டி காட்டற?! நான் எதிர்பார்க்கற அத்தனை அம்சங்களும் கொண்ட பொண்ணு இந்த ஒலகத்துலையே இருக்காதோ?!" அப்படின்னு கேட்டிங்கன்னா கண்டிப்பா இருப்பாங்க! ஆனா அவங்கெல்லாம் அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற நம்மை விட தகுதி வாய்ந்த பயகளுக்கு அமையறதுக்குதான் வாய்ப்புகள் அதிகம்! அதனால சீக்கிரம் மேட்டரை முடிங்க!
தம்ரூல் என்னன்னா, எதிர்பார்ப்புகளின் எண்ணிக்கை is directly propotional to பொண்ணு தேடற காலம்!
சொந்தத்துல சொல்லி தேடறது, புரோக்கருங்க கிட்ட சொல்லறது, பேப்பருல குடுக்கறதுன்னு இதுல நாலஞ்சு வகை இருக்கு! ஒவ்வொன்னுலையும் +ம் இருக்கு -ம் இருக்கு! முதவகைல பொண்ணை செலக்ட் செய்தா போதும்! அவங்க வீட்டுவகையறா எல்லாம் விசாரிக்கவே வேணாம்! புரோக்கருன்னா வர்றப்ப எல்லாம் காசை வாங்கிகிட்டு கத்தையா ஜாதகத்தை அள்ளி வீசுவாரு! அட்டா இத்தனை பொண்ணுகளான்னு ஆச்சரியபட்டுடாதீங்க! இதெல்லாம் அவரு இதே மாதிரி இன்னும் 100 வீட்டுல குடுத்திருப்பாரு! நீங்க இதையெல்லாம் அலசி ஆராயறதுக்குள்ள இதே மாதிரி இன்னும் 10 டெலிவரி செய்வார். அதுலையும் எதையாவது ஒன்னை செலக்ட் செஞ்சு அவருக்கு சொன்னா "அடடா! அந்த பொண்ணுக்கு நேத்துதான் நிச்சமாச்சு"ம்பாரு. நெசத்துல அது கல்யாணம் கட்டி பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கே வந்திருக்கும்!
இந்த பேப்பருல குடுக்கறதை இன்னும் நம்மாளுங்க கௌரவக் குறைச்சலாத்தான் நினைக்கறாங்க! சொந்தபந்த ஆளுங்களுக்கு தெரிஞ்சா "அடடா! பையனுக்கு யாரும் பொண்ணு குடுக்க மாட்டாங்கறப்பா! அதான் பேப்பருல குடுத்திருக்காக"ன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்கன்னு பயம்! ஆனா, என்னைக்கேட்டா இதுதான் இருக்கறதுலையே ஈசியான வழி. இதோட ரீச் மிக அதிகம். ஒரே ரிஸ்க் அந்த சைடு ஆளுங்களை விசாரிச்சு அறியறதுதான்! பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சி வரைக்கும் இதுக்கு உபயோகப்படுதுன்னா பார்த்துக்கங்க! இந்த காலத்துல படிச்ச பசங்க படிச்ச புள்ளைங்களை பார்க்கறதால இந்த வகைல சீக்கிரம் மேட்டரு முடிஞ்சுரும்! கொடுக்கற விளம்பரத்துல என்ன எழுதறதுன்னு யோசிக்கவே வேணாம்! ஒரு ஞாயித்துக்கிழமை பேப்பரு இருந்தா போதும்! அதுல நம்ப மக்கா விதவிதமா வகைவகையா கேட்டிருக்கறதை ஒரு தடவை பார்த்தா நமக்கு என்ன வேணும்கறதை ஈசியா கண்டுக்கலாம்! "காலையில் கோபால் பல்பொடியில் பல்துலக்க விரும்பும், வீட்டாரின் லைப்பாய் சோப்பையே உபயோக்க விரும்பும் பெண் தேவை!"கற ரேஞ்சுல வந்துக்கிட்டு இருக்கு!
ஆண்களிலும் சில நல்ல உள்ளங்கள் இருக்குங்க! "ஒரு பெண்ணை வீடுவரைக்கும் போய் பார்த்துவிட்டு வேண்டாம்னு சொல்லமாட்டேன்! அது பாவம்", "விதவைப் பெண்ணைத்தான் கட்டிக்குவேன்" இப்படி. தப்பில்லைங்க. முதலாவது சரிதான்! போட்டோ ஜாதகம் பார்த்து பிடிச்சுப்போய், வீட்டுல இல்லாம வெளில கோவில்லையோ இல்லை பொண்ணுபய மட்டும் 'காபிடே'லையோ பார்த்து ஒருத்தருக்கொருத்தர் பிடிச்சிருக்கான்னு தெரிஞ்சுக்கறது நல்லது. இதில்லாம சொந்தபந்தம் அத்தனைபேரையும் அனுசரிச்சு போறேன்னு 15 பேரோட வாரம் இருமுறை வீடுவீடா போய் இறங்கி செலக்ட் செய்யறது கட்டாயமாக தவிர்க்கப்பட வேண்டியது! இதையும் மீறி சில பல காரணங்களால் அமையலைன்னா இதுக்காக வருத்தப்பட வேண்டியதில்லை! இந்த அரேஞ்ச்டு மேரேஜ்ல இதெல்லாம் தவிர்க்க முடியாது. இரண்டாவது, ஒரு பெண்ணை பிடித்துப்போய் "இவள் என் வாழ்க்கைத் துணையாக வந்தால் மகிழ்வேன்! விதவை என்பது பிரச்சனையில்லை! மனதார ஏற்றுக்கொள்வேன்" என்று ஒரு திருமணம் செய்வது வேறு! "ஒரு விதவைக்கு வாழ்க்கை தருவதே என் லட்சியம்! அதனால் கட்டினால் கைம்பெண்தான்" என சொல்லிக்கொண்டு 10 விதவைகளை பார்த்து அதில் நல்ல விதவையாய் தேர்ந்தெடுத்து திருமணம் செய்வது வேறு! தேர்ந்தெடுக்கும்போதே அந்த நோக்கம் அடிபட்டுப் போகிறது. திருமணம் என்பது ஒருவருக்கு ஒருவர் செய்யும் தியாகமோ, போடப்படும் பிச்சையோ, கொள்கைப்பிடிப்பை நிறுவுவதற்கான காரணியோ அல்ல!
ஜாதகம் என்பதையும் உங்கள் வீட்டு பெருசுகளின் மனத்திருப்திக்காகவும் உங்களின் திருப்திக்காகவும் என்ற அளவில் மட்டுமே பாருங்கள்! பொண்ணு போட்டோ பிடிச்சிருக்கு, 10க்கு 7 பொருத்தம் இருக்கு! செய்யலாமா? சந்தோசம்! வீட்டு ஆளுங்களை பிடிச்சிருக்கா சந்தோசம்! பேசிப்பார்த்ததுல விசாரிச்சுப்பார்த்ததுல ஒத்து வரும்னு தோணுதா! சந்தோசம்! நிச்சயத்தை வைச்சுக்க வேண்டியது! நாள் குறிச்சு முகூர்த்தத்தை வைச்சுக்க வேண்டியது! அவ்வளவுதான்! இதில்லாம பொண்ணு பார்க்க போறது, தாலி வாங்கறது, புடவை என்ன கலர் ராசி, நிச்சியத்துக்கு அப்பறம் பொண்ணு வீட்டை விட்டு வெளில போலாமான்னு தொட்டது தொன்னூருக்கும் ஜோசியரை கேட்டுக்கிட்டு இருந்தம்னா நம்ப விருப்பத்துக்கு இல்லாம கல்யாணம் ஜோசியரு விருப்பத்துக்குதான் நடக்கும்!
போன பதிவுல நம்பகமா நெளிவுசுழிவோட பேசறதுக்கு ஒருத்தரு வேணும்னு சொன்னேன்ல! அது பொண்ணு இதுதான்னு கண்ணுபிடிச்சப்பறம் ரெண்டு சைடுலையும் நல்ல விதத்துல பேசி முடிக்கறதுக்கு! சிலதெல்லாம் நேருக்குநேரா கட்ரைட்டா பேசமுடியாது! அதுக்கெல்லாம் இவுகதான் கரெக்ட்டு! "கல்யாணத்தை கோவில்லதான் வைக்கனும்.இது எங்க பரம்பரை வழக்கம்"னு நாம சொல்ல, "முடியாது! எங்களுக்கு ஒரே பொண்ணு! சிறப்பா மண்டபத்துல தான் செய்யனும்"னு அவங்க சொல்ல, இந்த மாதிரி ஆளுக "சரிங்க! முகூர்த்தத்தை மட்டும் காலைல கோவில்ல வைச்சுக்கலாம், தாலி கட்டுன உடனே நேரா மண்டபம்தான்! மத்தியான விருந்துல இருந்து சாயந்தர ரிசப்சன் வரை கிராண்டா கொண்டாடிலாம்"னு ரெண்டு பக்கமும் காயப்படாம பேசி முடிக்கறதுக்கு இவங்க உதவி கட்டாயம் தேவை!
நானெல்லாம் வரதட்சணை வாங்க கூடாதுங்கற கட்சி! அதுக்காக உங்களையும் அப்படி செய்யறதுதான் கரெக்டுன்னு இங்கு வாதாட விரும்பலை! குடும்ப கவுரவம், எங்க பொண்ணுக்கு செய்யறோம்னு இதுல ஆயிரத்தெட்டு அரசியல் இருக்கு! அதனால எதிர்பார்ப்புகளை தெளிவா இதது இப்படித்தான்னு கேக்கறது எவ்வளவோ நல்லது! அவங்களும் முடிஞ்சா செய்யறோம், இல்லைன்னா வேற இடம்னு போயிருவாங்க! இதெல்லாம் இல்லாம "எங்களுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை! உங்க சக்திக்கு முடிஞ்சதை செய்யுங்க" அப்படிங்கறது நமக்கு வேணா நாகரீகமா சொல்லறதா இருக்கலாம்! ஆனா அந்த சைடு கொழ்ம்பிருவாங்க! எது செஞ்சாலும் குத்தமா போயிருமேன்னு படபடப்பாவே இருக்கும்! செஞ்சதுக்கப்பறம் "இது நொள்ளை! அது கம்மி"ன்னு சொல்லறதுக்கே நம்மாளுக நாலுபேரு கூட இருப்பாங்க! ஞாபகம் வைச்சுக்கங்க "சொம்பு சைசு சின்னது"ன்னு வீம்பு புடிச்ச ஆளுங்க எல்லாம் செயிலுக்கு போறவரைக்கும் எல்லாம் மேட்டரு போயிருக்கு!
போன பதிவுலையே கடைசியா சொல்லாம விட்ட மேட்டரு ஒன்னு! ஏதோ இப்போத்தான் மழைக்கு போதிமரத்துக்கு கீழ தெரியாம ஒதுங்கிட்ட மாதிரி ஒரு நல்லெண்ணம் மனசுல வந்து கல்யாணத்துக்கு முன்னாடி ஓடம்பைத் தேத்தனும், வெயிட்டை குறைக்கனும், தேகத்துல 'தெம்பு' கூட்டனும்னு ஒரு துடிப்பா இருக்கும்! அப்படின்னா இந்த ஜிம்முக்கு போறது, காலைல பால்காரனுக்கு இணையா ஓடறதுன்னு எதையாவது இப்போவே ஆரம்பிச்சுடுங்க! இதெல்லாம் இல்லாம கல்யாணத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் இந்த ஐடியா வந்ததுன்னா ஒன்னுத்துக்கும் வேலைக்காவாது! இவ்வளவு நாள் ஊத்தி ஊத்தி ஊறப்போட்ட கல்லீரலையும், ஊதி ஊதி கறையாக்குன நுரையீரலையும் ஒரே மாசத்துல மீட்டு கொண்டுவந்துடலாம்னு கடைசி கட்டத்துல ஜிம்முக்கோ, ஏரோபிக்ஸ்சுக்கோ போய் அங்க இங்க புடிச்சிக்கிட்டு முகூர்த்தத்துல தாலியை தூக்கமுடியாம போனாக்கூட பரவாயில்லை... பின்னாடி நின்னு யாராவது சித்தி, அக்கான்னு உதவுவாங்க! ஆனா அதுக்கப்பறம்... ஆமா... சொல்லிட்டேன்!
உங்களைப் பற்றிய சுயமதிப்பீடுகளோடு இருங்கள்! உங்கள் எதிர்பார்ப்புகளை நியாயமானதாக வைத்துக்கொள்ளுங்கள்! ஒரு பெண்ணை உங்கள் மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று சொல்வதன் மூலம் அவள் மட்டுமல்ல, அவள் குடும்பத்தாரும் நம் உறவாகப்போகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள்!
இன்னைக்கு அவ்வளவுதாங்க மேட்டரு!
